திருகோவிலூர் நூலகம்

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.

மணலூர்ப்பேட்டை வாசகர் வட்டக்குழுத் தலைவர் கு.ஐயாக்கண்ணு, நூலகப் புரவலர் ச.அருண்குமார், தேவரடியார்குப்பம் வாசகர் வட்டக்குழுத் தலைவர் சக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பணி நிறைவு பெற்ற ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை தென்னிந்தியக் களப்பணி அலுவலர் டாக்டர் ர.ராமசாமி நூலகத்தின் அவசியம் அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார். பின்னர்  நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். 

இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர்  மணலூர்ப்பேட்டை கிளை நூலகங்கள் வளர்ச்சிக்காக தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலராக இணைந்தார். 

இதேபோல் திருக்கோவலூர் நூலக வளர்ச்சிக்காக வழக்குறைஞர் எம்.பாண்டு ரூபாய் 1000 செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தார்.

இந் நிகழ்ச்சியில் வாசகர் வட்ட உறுப்பினர்கள் இராம.சுதாகரன், ம.விருதுராஜா மற்றும் பணி பாளர்கள் சு.சம்பத் . இரா.கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.

புதன், 14 மார்ச், 2012

திருக்கோவிலூரில் புத்தக கண்காட்சி சார்-ஆட்சியர் தொடங்கிவைத்தார்



திருக்கோவிலூரில் புத்தக கண்காட்சி
சார்-ஆட்சியர் தொடங்கிவைத்தார்



திருக்கோவிலூர், ஜன. 8:
 திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் கிளை நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை சார்-ஆட்சியர் த.ஆனந்த் கலந்துகொண்டு  சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
 இந்நூலகத்தில் 35 ஆயிரம் நூல்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 81 புரவலர்கள் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்துச் செல்லக்கூடிய இந்நூலகத்தில் இந்தாண்டு பெறப்பட்ட 300 தலைப்பிலான நூல்கள் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டது. இக்கண்காட்சியை சார்-ஆட்சியர் த.ஆனந்த் தொடங்கிவைத்துப் பேசினார்.
 அப்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.நெடுஞ்செழியன், தேவனூரைச் சேர்ந்த  ராமதாஸ், ஓய்வுப்பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி இந்நூலக புரவலராக இணைந்தனர்.
 இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி உதியன் தலைமை தாங்கினார். புலவர் பெண்ணைவளவன், கவிஞர் அருள்நாதன் தங்கராசு, நல்லாசிரியர் அப்பர்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
 ஆசிரியர்கள் ரவி, ஜானகிராமன் புரவலர்கள் ரகோத்தமன், கருப்பன், கண்ணன், ஜெயக்குமார், சேகர், சங்கராபுரம் நூலகர் செழியன் மற்றும் வாசகர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகர்கள் த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலம், பா.முருகேசன், சு.செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.


படவிளக்கம்
------------
திருக்கோவிலூரில் நூலக கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிடும் சார்-ஆட்சியர் த.ஆனந்த்.
07TKRLI2.jpg  
07TKRLIB.jpg  

சனி, 4 பிப்ரவரி, 2012

நல்நூலகர் விருது திருக்கோவிலூர் நூலகருக்கு வழங்கப்பட்டது


நல்நூலகர் விருது
திருக்கோவிலூர் நூலகருக்கு வழங்கப்பட்டது

திருக்கோவிலூர், நவ. 18:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரிந்து வரும் மு.அன்பழகனுக்கு தமிழக அரசின் நல்நூலகர் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பொதுநூலக இயக்ககம் சார்பில் நல்நூலகர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இவ்விழா சென்னை தேவநேயபாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராசன் தலைமை தாங்கினார். பொதுநூலக இயக்குனர் ச.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திருக்கோவிலூர் நூலகர் மு.அன்பழகனுக்கு நல்நூலகர் விருது, பரிசுத் தொகை ரூ.2,000 மற்றும் பதக்கம் வழங்கி கெளரவித்தார்.
இவ்விழாவில் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை தென்னிந்திய களப்பணி அலுவலர் ர.ராமசாமி, விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன், விழுப்புரம் மாவட்ட பொதுநூலகத்துறை நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் கோ.தனுசு மற்றும் நிர்வாகிகள், நூலகர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மு.அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர் வட்டம், மேலந்தல் கிராமத்தில் பிறந்த மு.அன்பழகன், 1995-ல் அக்கிராமத்தில் பகுதிநேர நூலகராக பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். மேலந்தல், மணலூர்பேட்டையை தொடர்ந்து தற்போது திருக்கோவிலூரில் பணியாற்றி வருகிறார்.
இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர் கட்டுரை, கவிதைகள் என இதுவரையில் நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தம்முடைய சீரிய நூலகப் பணி வாயிலாகச் சமுதாயத்துக்கு மிகச் சிறந்த தொண்டாற்றியதைப் பாராட்டி போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நல்நூலகர் விருது வழங்கியுள்ளது.

படம்: சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திருக்கோவிலூர் நூலகர் மு.அன்பழகனுக்கு நல்நூலகர் விருது வழங்கியபோது எடுத்தப் படம்.

புதன், 9 நவம்பர், 2011

நூலகத்தின் புரவலர்கள்



நூலகங்களுக்கு பெற்றோர்கள்
குழந்தைகளுடன் வர வேண்டும் 

திருக்கோவிலூர், பிப். 22:
 நூலகங்களுக்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் வர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் தெரிவித்தார்.
 திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் கிளை நூலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.
 ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இந்நூலககத்தில் நூல் இரவல் பிரிவு, குறிப்புதவி பிரிவு, நாளிதழ் பிரிவு, இணையதள பிரிவு, சிறுவர் பிரிவு என வாசகர்களின் நலன்கருதி ஏற்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
 கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு மணி நேரம் இணையதளம் பயன்படுத்துவோருக்கு குறைந்த கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
 இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு குழந்தைகளும் பள்ளிக் கல்வி, உடற்கல்வி எவ்வளவு அத்தியாவசியமோ, அந்த அளவுக்கு பொதுக் கல்வியும் மிகவும் அவசியம். அந்த பொதுக்கல்வி அனைத்தும் நூலகங்களில் உள்ளது.
 எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குத் தேவையான நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், அந்நேரங்களில் பெற்றோர்களும் அவர்களுக்குத் தேவையான நூல்களை எடுத்து வாசிக்கலாம்.
 இதை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 இதைத்தொடர்ந்து இந்நூலக வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியை சாந்தி ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கட், வினோத்குமார் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர்.
 மேலும் ஓய்வுப்பெற்ற சுகாதார ஆய்வாளர் முக்கண்ணன், நல்லதம்பி ஆகியோர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.
 அப்போது வாசகர் வட்டக்குழுத் தலைவர் உதியன், நல்நூலகர் மு.அன்பழகன் மற்றும் நூலகர்கள் த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலபதி, பா.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

படவிளக்கம்
----------------------
திருக்கோவிலூரில் மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகனிடம் (இடமிருந்து 2-வது) நூலக வளர்ச்சிக்காக தலா ரூ.1000 செலுத்திய  புரவலர்கள்.