நூலகங்களுக்கு பெற்றோர்கள்
குழந்தைகளுடன் வர வேண்டும்
திருக்கோவிலூர், பிப். 22:
நூலகங்களுக்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் வர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் தெரிவித்தார்.
திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் கிளை நூலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இந்நூலககத்தில் நூல் இரவல் பிரிவு, குறிப்புதவி பிரிவு, நாளிதழ் பிரிவு, இணையதள பிரிவு, சிறுவர் பிரிவு என வாசகர்களின் நலன்கருதி ஏற்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு மணி நேரம் இணையதளம் பயன்படுத்துவோருக்கு குறைந்த கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு குழந்தைகளும் பள்ளிக் கல்வி, உடற்கல்வி எவ்வளவு அத்தியாவசியமோ, அந்த அளவுக்கு பொதுக் கல்வியும் மிகவும் அவசியம். அந்த பொதுக்கல்வி அனைத்தும் நூலகங்களில் உள்ளது.
எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குத் தேவையான நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், அந்நேரங்களில் பெற்றோர்களும் அவர்களுக்குத் தேவையான நூல்களை எடுத்து வாசிக்கலாம்.
இதை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்நூலக வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியை சாந்தி ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கட், வினோத்குமார் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர்.
மேலும் ஓய்வுப்பெற்ற சுகாதார ஆய்வாளர் முக்கண்ணன், நல்லதம்பி ஆகியோர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.
அப்போது வாசகர் வட்டக்குழுத் தலைவர் உதியன், நல்நூலகர் மு.அன்பழகன் மற்றும் நூலகர்கள் த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலபதி, பா.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
படவிளக்கம்
----------------------
திருக்கோவிலூரில் மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகனிடம் (இடமிருந்து 2-வது) நூலக வளர்ச்சிக்காக தலா ரூ.1000 செலுத்திய புரவலர்கள்.